கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மீதும் அக்கட்சியின் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது. நீதிபதியின் குற்றச்சாட்டை விமர்சித்து வீடியோ வெளியிட்ட 3 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் விமர்சகரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான வரதராஜன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து தீர்ப்பு வெளியிட்ட நீதிபதிக்கு எதிராக சன் டிடெக்ட்டிவ் ஏஜென்சி உரிமையாளரும், ஓய்வு பெற்ற காவல் அதிகாரியுமான வரதராஜன் விமர்சித்து பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் தெற்கு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வரதராஜன் ஆஜர்படுத்தப்பட்டு இருப்பதாகவும் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.