தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’ ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இது வெறும் நடைபயணம் அல்ல – மத நல்லிணக்கம், சமூக சமத்துவம், இளைஞர்களை போதைப்பொருள் மற்றும் மது அருந்துதலிலிருந்து மீட்பது, ‘சனாதன சக்திகள்’ உருவாக்கும் பிரிவினைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை முன்னிறுத்தி, திமுக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் அரசியல் உத்வேகம் நிறைந்த பயணமாகும்.

Advertisment

திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே நடந்த தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து சமத்துவ நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், “போதைப்பொருள் மற்றும் மதவாத அரசியலின் நச்சைத் தமிழகத்தில் நுழைய விடக்கூடாது” என்றும் வலியுறுத்தினார். இந்த 11 நாள் பயணம், ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் முடிவடைகிறது. நாளொன்றுக்கு 15 முதல் 17 கிலோமீட்டர் வரை வைகோ சுறுசுறுப்புடன் நடந்து வருகிறார். நடைபயணத்தின் போது சிலம்பம் சுற்றி தொண்டர்களை உற்சாகப்படுத்தியும், சாலையில் அமர்ந்து தொண்டர்களுடன் கலந்துரையாடியும் வருகிறார்.

Advertisment

மேலும், ஒய்வு நேரங்களில் அந்தந்தப் பகுதி மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 82 வயதான வைகோ இளைஞர்களுக்கு இணையான ஆற்றலுடன் நடந்து வருவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. முதல் மூன்று நாட்களிலேயே மொத்த தூரத்தில் நான்கில் ஒரு பகுதியை வெற்றிகரமாகக் கடந்துள்ளார்.

இந்த நிலையில், சமூக நல்லிணக்க நடைப்பயணத்தின் 10வது நாளான இன்று (11-01-26) வைகோவை மதுரை ஒத்தக்கடையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கடையநல்லூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ அபுபக்கர் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பால பிரஜாபதி அடிகளார் ஆகியோர் வரவேற்றனர். 

Advertisment