சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அர்ச்சுனன் மூதாட்டியை சரமாரியாகத் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா காலக்கட்டத்தில் போலீசாரை அர்ச்சுனன் தாக்கியதாக ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது மூதாட்டியையும் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மேச்சேரி ஒன்றியம் காமனேரி பகுதியில் சாலை அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியைச் சேர்ந்த சரோஜா என்ற மூதாட்டி, தன் வீட்டோடு ஒட்டி சாலை அமைக்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும், வீட்டை ஒட்டி சாலை அமைக்காமல், சற்று இடைவெளி விட்டு, அருகிலுள்ள அரசு நிலத்தில் சாலை அமைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை அறிந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அர்ச்சுனன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார். அப்போது தனது கோரிக்கையை சரோஜா தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், ஆத்திரமடைந்த அர்ச்சுனன் அவரைச் சரமாரியாகத் தாக்கினார். கிராம மக்கள் முன்னிலையிலேயே கொடூரமாகத் தாக்கிய அவர், கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்த நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அர்ச்சுனனால் தாக்கப்பட்ட சரோஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய அர்ச்சுனன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரோஜா மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆரம்பத்தில் திமுகவில் பயணித்த அர்ச்சுனன், 1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் வெற்றி பெற்றார். பின்னர் திமுகவில் இருந்து விலகிய அவர், அதிமுகவில் இணைந்து அக்கட்சி சார்பில் இரு முறை (1989 & 1991) எம்.எல்.ஏ.வாகவும் பொறுப்பு வகித்தார். அதன் பிறகு அதிமுகவில் இருந்து வெளியேறி ஒரு காலகட்டத்தில் தேமுதிகவில் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். தற்போது அரசியலில் இருந்து விலகி , விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
Follow Us