Former MLA Anant Singh said he was elected as an MLA because he wasnot educated
பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வாக்கு சேகரிப்பின் ஒரு பகுதியாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.வுமான அனந்த் சிங் சில தினங்களுக்கு முன்பு உள்ளூர் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர், “நான் வெற்றி பெற்று நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகவில்லை என்றால் எனது எம்.எல்.ஏ பதவியை நான் ராஜினாமா செய்வேன். நிதிஷ் குமார் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். அவர் இல்லையென்றால், நானும் அரசியலில் இருக்க மாட்டேன். அவர் என்னை நம்பி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். அவர் முதலமைச்சராக இருப்பதை நிறுத்தினால், நான் சட்டமன்றத்தில் எம்எல்ஏவாகக் கூட அமர மாட்டேன்” என்று கூறினார். இவருடைய பேட்டி அம்மாநில அரசியலில் பேசுபொருளானது.
இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ அனந்த் சிங் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரின் கல்வித் தகுதிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் பள்ளிக்குச் சென்றதில்லை. நான் பள்ளிக்குச் சென்றிருந்தால், நான் ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பேன்” என்று கூறினார். பின்னர் அவரிடம், படிக்காதவர்கள் எம்.எல்.ஏ.க்களாக மாறுகிறார்கள் என்று நீங்கள் சொல்ல முயற்சிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “படிக்காத ஒருவரை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். ஆனால் படிக்காதவர், எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படலாம். நான் படிக்காதவராக இருந்தாலும் ஐந்து, ஆறு முறை வெற்றி பெற்றுள்ளேன்” என்று கூறினார்.
பாட்னா மாவட்டத்தில் உள்ள மோகாமா சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் இந்த தேர்தலில் அனந்த் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us