அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவுள்ளதாக நேற்று முன்தினம் (25.11.2025) தகவல் வெளியானது. இது தொடர்பாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் செங்கோட்டையனிடன் கட்சியில் இணைவது குறித்து சந்தித்துப் பேசியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து செங்கோட்டையன் இன்று (27.11.2025) தவெகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று (26. 11.2025) காலை ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து செங்கோட்டையன் வழங்கினார். இதனையடுத்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விஜய்யை செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். அதோடு செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் எம்.பி.யுமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகள் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வருகை தந்து தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/27/sengottaiyan-vanakkam-tvk-2025-11-27-10-10-31.jpg)