'கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும்' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உயர்த்தி இருக்கும் குரல் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. தொடர்ந்து ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லி கிளம்பிய செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இத்தகைய சூழலில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செங்கோட்டையன் மற்றும் டி.டி.வி. தினகரனை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அந்த விடியோவில், “எழுச்சி பயணத்தினால் இன்றைக்குத் தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி அழைத்துச் செல்வதை ஒரு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். தங்களுடைய இயலாமையினாலே அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற பொறாமை. அந்த பொறாமை தீயினாலே இன்றைக்கு அவர்கள் தங்களை தாங்களே இன்றைக்குத் தடம் மாற்றிக் கொண்டு அதிமுகவில் ஒற்றுமை என்கிற பெயரை வைத்துக்கொண்டு அதிமுகவிற்கு விண்ணளவு உயர்ந்து கொண்டிருக்கிற அந்த செல்வாக்கிலே ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என்று கனவு காண்கிற வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கெல்லாம் தோல்வியைத்தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மூலம் தமிழ்நாட்டு மக்கள் தோல்வியைத்தான் தருவார்கள்” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தன்னுடைய பயணத்தை என்றைக்கும் செய்வதைப் போல இன்றைக்குத் திருமணத்துக்குச் செல்வதாக இருக்கிறேன். அப்போது உதயகுமாரைப் பற்றிக் கேட்டார்கள் மன்னிக்க வேண்டும். அவர் துக்கத்திலே அவருடைய தாய் இழந்து இழந்து கண்ணீரில் மல்கிக் கொண்டிருக்கிற போது அவர் குடும்பத்திற்கு நான் செல்ல இயலவில்லை. இந்த சூழ்நிலையில் அவருடைய தாயுடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
என்னை பொறுத்த வரையிலும் பல்வேறு கேள்விகள் கேட்டீர்கள். அந்த கேள்விக்குப் பதில் சொல்கின்ற வகையில் அடுத்த கட்ட முடிவுகள் என்ன என்று கேட்டீர்கள். அடுத்த கட்ட முடிவுகளைப் பொறுத்த வரையிலும் அதற்குக் காலம் தான் பதில் சொல்லுமே தவிர என்னால் இன்றைக்குப் பதில் சொல்ல இயலாது. உதயகுமார் போன்றவர்கள் என்னோடு நல்ல பழகக்கூடியவர் நல்ல பண்பாளர். அவருடைய தாய் இழந்து இன்றைக்குத் துக்கத்திலே துயரத்திலும் இருக்கிறார்.” எனப் பேசினார்.