Former maharashtra Chief Minister's controversial comment on Operation Sindoor
கடந்த ஏப்ரல் மதம் 22 ம் நாள் காஷ்மீரின் பஹல்காம் எனும் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு இராணுவங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் பாகிஸ்தான் ஏவிய அனைத்து ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆபரேஷன் சிந்தூரில் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானப்படை முற்றிலுமாக தரையிறக்கப்பட்டது. ஒரு விமானம் கூட பறக்கவில்லை. குவாலியர், பதிண்டா அல்லது சிர்சாவிலிருந்து ஒரு விமானம் புறப்பட்டிருந்தால் கூட, பாகிஸ்தான் அதை சுட்டு வீழ்த்தியிருக்கும். அதனால்தான் விமானப்படை முற்றிலுமாக தரையிறக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே, இந்தியா முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது” என்று கூறினார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிருத்விராஜ் சவானின் கருத்து பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய பிருத்விராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், இத்தனை தோல்விக்கு பிறகும் காங்கிரஸ் பாகிஸ்தானை ஆதரிக்கிறது என்றும், அக்கட்சியின் தலைவரின் மனப்பான்மையம் இதே நிலையில் தான் உள்ளது எனவும் ராகுல் காந்தியை பா.ஜ.கவினர் விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சை விவகாரம் தொடர்பாக பிருத்விராஜ், “நான் எந்த தவறான கருத்தையும் கூறவில்லை. எனவே நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று மறுத்துவிட்டார்.
Follow Us