குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி,  பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

ஒருபக்கம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மறுபுறம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தர வேண்டும் என இந்தியா கூட்டணியும் மற்ற கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது. மேலும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான இருவரும், இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, “சுதர்ஷன் ரெட்டி நக்சலிசத்திற்கு உதவியவர். அவர் சல்வா ஜூடும் தீர்ப்பை வழங்கினார். சல்வா ஜூடும் தீர்ப்பு வழங்கப்படாவிட்டால், நக்சல் பயங்கரவாதம் 2020க்குள் முடிவுக்கு வந்திருக்கும். சல்வா ஜூடும் தீர்ப்பை வழங்கிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் அவர்” என்று கூறினார்.

கடந்த 2011 ஜூலை சல்வா ஜூடும் அமைப்பை கலைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதியாக சுதர்சன் ரெட்டி இருந்தார். அந்த அமர்வு, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் பழங்குடி இளைஞர்களை சிறப்பு காவல் அதிகாரிகளாகப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நக்சலிசத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த சுதர்சன் ரெட்டி, “நான் தீர்ப்பை எழுதியுள்ளேன். தீர்ப்பு என்னுடையது அல்ல, தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தினுடையது. தீர்ப்பின் தகுதியைப் பொறுத்தவரை, நான் பேசமாட்டேன், ஏனென்றால் ஒருவர் தனது சொந்த தீர்ப்பின் மகத்துவத்தைப் பற்றிப் பேசக்கூடாது என்று என் சகாக்களால் எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட ஆவணம் அல்ல. உள்துறை அமைச்சர் அவர்களால் விளக்கப்படுவதற்குப் பதிலாக முழு தீர்ப்பையும் அவரே படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சுமார் 40 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பைப் படிக்க அவருக்கு அவ்வளவு நேரம் இருக்காது. அவர் தீர்ப்பைப் படித்திருந்தால், ஒருவேளை அவர் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்க மாட்டார். அவ்வளவுதான் நான் சொல்லிவிட்டு அதை அங்கேயே விட்டுவிடுகிறேன்” என்று கூறினார்.

Advertisment

இருப்பினும் அமித் ஷாவின் பேச்சுக்கு முன்னாள் நீதிபதிகள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், மதன் பி லோகூர் மற்றும் ஜே செலமேஸ்வர் உள்ளிட்ட 18 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளதாவது, ‘சல்வா ஜூடும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பகிரங்கமாக தவறாகப் புரிந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது. தீர்ப்பு எந்த இடத்திலும், வெளிப்படையாகவோ அல்லது அதன் உரை, நக்சலிசம் அல்லது அதன் சித்தாந்தத்தை கட்டாயமாகவோ ஆதரிக்கவில்லை. இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கான பிரச்சாரம் சித்தாந்த ரீதியாக இருக்கலாம், ஆனால் அதை நாகரிகமாகவும் கண்ணியமாகவும் நடத்தலாம். எந்தவொரு வேட்பாளரின் சித்தாந்தத்தையும் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும், உயர் அரசியல் அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாரபட்சமாக தவறாகப் புரிந்துகொள்வது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது விளைவை ஏற்படுத்தும், மேலும் நீதித்துறையின் சுதந்திரத்தையே உலுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.