Advertisment

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

sathyapal-malik

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் (வயது 79) காலமானார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி சத்யபால் மாலி இன்று (05.08.2025) மதியம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைத்தளதில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். கடைசி வரை பயமின்றி உண்மையைப் பேசியவராகவும், பொதுமக்களின் நலன்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவராகவும் நான் அவரை எப்போதும் நினைவில் கொள்வேன்.

Advertisment

அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் எனது  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சத்ய பால் மாலிக்கின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். அமைப்பின் ஊடாக உயர்ந்த ஒரு மனிதர். அதிகாரத்திற்கு எதிராக உண்மையைப் பேசத் துணிந்தவர். அவரது மனசாட்சி அவரது பதவியுடன் ஓய்வு பெறவில்லை. வரலாறு அவர் வகித்த பதவிகளை மட்டுமல்ல, அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் நினைவில் வைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக சத்யபால் மாலிக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்தபோது அரசு ஊழியர்களுக்கான மருத்துவகாப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

Advertisment

மேலும் சத்யபால் மாலிக், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மை காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். 

அதாவது, ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

mk stalin Rahul gandhi Delhi passed away Former governor jammu and kashmir satya pal malik
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe