Former IFS officer, a client of the Governor, arrested at Puducherry fake medicine case
புதுச்சேரி மாநிலத்தில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி போலியாக மருந்து தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து பல்லாயிரம் கோடி வருமானம் பார்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை ராஜா என்கிற வள்ளியப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு முன்பு புதுவை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினார். பின்னர் இதற்காக எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டு விசாரணையும், கைதுகளும் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.
இந்த போலி மருந்து தயாரிப்பு கும்பலுக்கு பாஜகவை சேர்ந்தவரும், சபாநாயகருமான செல்வம் உடந்தை என காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தி வருகிறது. சட்டமன்ற எதிர்கட்சியான திமுக, ஆர்ப்பாட்டம் செய்தது. அனைத்து கட்சிகளும் இதில் சிபிஐ விசாரணை கேட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் எனச் சொல்லி இரண்டு தினங்களுக்கு முன்பு புதுவை துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில் சத்தமே இல்லாமல் அதிரடியாக புதுவையை சேர்ந்த முன்னாள் ஐ.எப்.எஸ் அதிகாரி சத்தியமூர்த்தியை ஓசூர் அருகே இன்று (24-12-25) போலீசார் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்துள்ளனர். இது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து போலிஸ் தரப்பில் விசாரித்தபோது, முக்கிய குற்றவாளியான ராஜாவை, விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இதில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் கூட கைது செய்யப்பட்டார். அந்த வரிசையில் ராஜாவுடன் பாட்னராக இருந்த சத்தியமூர்த்தியை கைது செய்துள்ளோம் என்கிறார்கள்.
சத்தியமூர்த்தி, பாஜக ஆதரவாளராக களம்மிறங்கி புதுவை மாநிலத்தில் அரசியல் செய்து வந்தார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது புதுச்சேரி தொகுதியில் தன்னை பாஜக நிறுத்தும் என நம்பினார், அந்த நமபிக்கை பொய்யானது. அதன் பின் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார், அதுவும் கிடைக்கவில்லை. துணைநிலை ஆளுநர் கைலாசநாதனும் சத்தியமூர்த்தியும் அடிக்கடி சந்தித்து அரசியல் திட்டங்கள் வகுத்துக் கொண்டு இருந்தனர். பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக இவரை முன்னிறுத்தலாமா என்றுக் கூட ஆலோசிக்கப்பட்டது. தனியாக ஒரு அமைப்பு தொடங்கி புதுவையில் பாஜகவுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே அரசியல் செய்துக்கொண்டிருந்தார். அவரைத்தான் போலி மருந்து விகாரத்தில் கைது செய்துள்ளது புதுச்சேரி எஸ்.ஐ. டி.
Follow Us