100க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூர் அருகே தர்மஸ்தலா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், தனது வழக்கறிஞர்கள் மூலம் தர்மஸ்தல காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘1995ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தினரால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களில், சிறுமிகளும் அடங்கும். அந்த பெண்களின் உடல்களை அடக்கம் செய்யுமாறு கோயில் நிர்வாகத்தினர் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தினர். 1998ஆம் ஆண்டு எனது மேற்பார்வையாளர் உடல்களை அடக்கம் செய்ய மறுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார். ஆனால் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

தர்மஸ்தலாவைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் டீசல் பயன்படுத்தி சில உடல்களை எரிக்கவும், மற்றவற்றை அடக்கம் செய்யவும் என்னை கட்டாயப்படுத்தினர். நான் நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்துள்ளேன். இறுதிச் சடங்குக மரியாதையுடன் செய்யப்படவில்லை. குற்ற உணர்வு என்னை துரத்துகிறது. இறந்தவர்களுக்கு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்க இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். தர்மஸ்தலா கோயில் நகரத்தின் நிர்வாகத்துடன் தொடர்புடைய நபர்களால் குற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, எனது உயிருக்கும் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்று அஞ்சி, நான் அண்டை மாநிலத்திற்கு தப்பிச் சென்றேன். எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டப்பூர்வ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், இந்த குற்றங்களைச் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவேன். அடக்கம் செய்யப்பட்ட இடங்களையும் அடையாளம் காண்பிப்பேன். உடல்களை தோண்டி எடுக்க வேண்டும், பெண்களின் இறப்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து, பெல்தங்கடி முதன்மை சிவில் நீதிபதி முன்னிலையில் புகார்தாரர் தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். மேலும், அவர் ரகசியமாக தோண்டி எடுத்ததாகக் கூறப்படும் எலும்புக்கூடுகளையும் ஆதாரமாக சமர்பித்தார். இதையடுத்து, பெல்தங்கடி போலீசார் அந்த எலும்புகூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் துப்புரவு தொழிலாளர் ஒருவர், புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

புகார்தாரரின் வழக்கறிஞர்கள் இது குறித்து கூறியதாவது, ‘புகார்தாரர் கல்வியறிவற்றவர், நீதிமன்றத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர் தனது வாக்குமூலத்தை அளிக்கும்போது வழக்கறிஞர்களில் ஒருவரை தன்னுடன் வருமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும், வழக்கறிஞர்களின் வருகைக்கு நீதிமன்றம் உடன்படவில்லை. மேலும், புகார்தாரருக்கு சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் 2018 இன் கீழ் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.அந்த நபர் இப்போது பெல்தங்கடி போலீசாரின் காவலில் உள்ளார், அதே நேரத்தில் தடயவியல் அறிவியல் ஆய்வக (FSL) நிபுணர்கள், புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்வார்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.