ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான ஷிபு சோரன் (81) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

அப்போதைய பீகார் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 1944ஆம் ஆண்டு பிறந்த ஷிபு சோரன், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய 18 வயதில் சந்தால் நவ்யுவக் எனும் சங்கத்தை உருவாக்கிய இவர், கடந்த 1972ஆம் ஆண்டில் பெங்காலி மாக்ஸிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர் ஏ.கே. ராய் , குர்மி-மஹாடோ தலைவர் பினோத் பிஹாரி மஹாடோ  ஆகியோருடன் ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ எனும் கட்சியை உருவாக்கினார். அதன் பின்னர், அக்கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஷிபு சோரன், 1980இல் தும்கா மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1996 என தொடர்ச்சியாக மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 2002ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004, 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஷிபு சோரன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மத்திய நிலக்கரி அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ஷிபு சோரன், ஜார்க்கண்டில் மூன்று முறை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். முதல் முறையாக 2005ஆம் ஆண்டில் 10 நாட்கள் மட்டுமே முதல்வராக பதவி வகித்த இவர், 2008ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், 1வருடம் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன் பின்னர் மீண்டும் ராஜினாமா செய்து 2009ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை முதல்வராகப் பதவி வகித்துள்ளார். 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 8 முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஷிபு சோரன் பதவி வகித்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஒரு தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஷிபு சோரன் இருந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் சிறுநீரகப் பிரச்சனையால் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று (04-08-25) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து ஷிபு சோரனின் மகனும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அன்பான டிஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டா. இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்’ என்று தனது தந்தையின் மரணச் செய்தியைப் பதிவிட்டுள்ளார். ஷிபு சோரனுக்கு 3 மகன்களும், மகளும் உள்ளனர். அதில், ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது முதல்வராக பதவி வகித்து வருகிறார்.