முன்னாள் முதல்வரின் மகன் அதிரடி கைது; பிறந்தநாளின் போதே நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை!

bhube

Former Chief Minister bhubesh baghel son arrested by Enforcement Directorate takes action on his birthday

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகேலின் மகனை இன்று (18-07-25) அமலாக்கத்துறை கைது செய்திருப்பது சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இவரது ஆட்சிக் காலத்தில், ரூ.2,160 கோடி அளவில் மதுபான ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின்படி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை சந்தேகித்து அவர் மீது வழக்குப்பதிவு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக துர்க் மாவட்டத்தில் பூபேஷ் பாகேலும் அவரது மகன் சைதன்யாவும் ஒன்றாக வசிக்கும் வீட்டில் இன்று (18-07-25) காலை முதல் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. பூபேஷ் பாகேலுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீடு முன்பு பெருந்திரளாக திரண்டதால், அங்கு பலத்த போலீஸ் போடப்பட்டது. சோதனையின் முடிவில், சைதன்யா பாகேலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், அமலாக்கத்துறையின் வாகனங்களை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சைதன்யா பாகேல் கைது நடவடிக்கை குறித்து பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளதாவது, “அவர்களது எஜமானரை மகிழ்விக்க, மோடியும் அமித் ஷாவும் அமலாக்கத்துறையை என் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். நாங்கள் பயப்படவோ அல்லது தலைவணங்கவோ போவதில்லை. பூபேஷ் பாகேல் பயப்பட போவதில்லை. நாங்கள் உண்மைக்காகப் போராடுவோம். ஒருபுறம், பீகாரில், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஜனநாயகம் பறிக்கப்படுகிறது. மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்குவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்போது, நாட்டு மக்கள் புரிந்துகொண்டு நன்கு அறிந்திருக்கிறார்கள். மோடியும் அமித் ஷாவும் கொடுத்தது போன்ற பிறந்தநாள் பரிசை உலகில் உள்ள எந்த ஜனநாயகத்திலும் யாரும் வழங்க முடியாது” என்று ஆவேசமாகக் கூறினார். இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைதன்யா பாகேலின் பிறந்தநாளான இன்றே அவரை கைது செய்திருப்பது அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கவாசி லக்மாவை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பின்னர், ராய்ப்பூர் மேயரும் காங்கிரஸ் தலைவருமான ஐஜாஸ் தேபரின் மூத்த சகோதரர் அன்வர் தேபர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா, இந்திய தொலைத்தொடர்பு சேவை (ஐடிஎஸ்) அதிகாரி அருண்பதி திரிபாதி மற்றும் பலரையும் அமலாக்கத்துறை கைது செய்தது. இதுவரை, பல்வேறு குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் சுமார் ரூ.205 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

bhupesh baghel chattisgarh chattishghar enforcement directorate
இதையும் படியுங்கள்
Subscribe