கோவிலுக்கு வெளியே இந்துக்கள் அல்லாதோர் பிரசாதத்தை விற்பனை செய்தால் அவர்களை அடித்து நொறுக்குங்கள் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

11 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, வட மாநிலங்களில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். அதிலும் குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல், புத்தாடைகள் என விதவிதமாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் நவராத்திரி விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா, அக்டோபர் 2ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

Advertisment

நவராத்திரியை முன்னிட்டு மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் ‘விஸ்வ இந்து பரிஷத்’ என்ற இந்து அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கோயில்களைச் சுற்றி யார் பிரசாதம் விற்கிறார்கள் என்பதை சரிபார்க்க குழுக்களை உருவாக்க வேண்டும். விற்பனையாளர்கள் இந்துக்கள் இல்லையென்றால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு இந்து அல்லாதவர் பிரசாதம் விற்பதை நீங்கள் கண்டால், அவர்களை அடித்து நொறுக்குங்கள். பக்தர்கள் இந்து அல்லாத விற்பனையாளர்களிடம் இருந்து பிரசாதம் வாங்க மறுக்க வேண்டும். அவர்களை அதை விற்கவோ அல்லது கோயிலுக்குள் நுழையவோ அனுமதிக்கக் கூடாது.

உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். குடும்பங்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதங்களை கூர்மையாக வைத்திருக்க வேண்டும். எதிரி உங்கள் வீட்டின் வாசலைத் தாண்டினால் அவர்களை பாதியாக வெட்டுங்கள். ஏனென்றால் நமது மகள்களும், சகோதரிகளும் அவர்களின் வீடுகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாலையில் சிதறடிக்கப்படும் போது நாம் மிகுந்த வேதனையடைகிறோம். இந்த வலியைப் போக்க, எதிரி உங்கள் வீட்டின் வாசலைக் கடக்க முயற்சிக்கும் போது நீங்கள் அவர்களை நடுவில் வெட்ட வேண்டும். துர்கா வாஹினியின் வேலை ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துர்க்கையைத் தயாரிப்பதாகும். ஒவ்வொரு வீட்டிலும் ஆயுதங்களை வைத்திருக்க அழைப்பு விடுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் விதிகள் மற்றும் சட்டங்கள் நாம் பின்பற்றுகிறோம். ஏனென்றால் இந்த நாடு நம்முடையது” என்று பேசினார். 

Advertisment