ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 18ஆம் தேதி (18.12.2025) நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். ஏன் இவ்வளவு கோபத்தோடு அவர்களைத் திட்டுகிறார்கள் என நான் கூட யோசிப்பேன். அவர்கள் இருவரும் சொன்னதை நானும் திருப்பி சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி. திமுக ஒரு தீய சக்தி. த.வெ.க. ஒரு தூய சக்தி. தூய சக்தி. த.வெ.க.வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் இடையில் தான் போட்டியே. மக்கள் விரோத சக்தி திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் தான் முடியும்” எனப் பேசியிருந்தார். 

Advertisment

இதனையடுத்து சென்னை கீழ்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இயேசு பிரான், தீய சக்திகளை அழிக்க உலகத்திற்கு ஒளியாய் வந்தார். தீய சக்தியாக இருப்பவர்களை ஒளியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் மக்கள் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிகோட்டையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி த.வெ.க.வை மறைமுகமாகக் கடுமையான விமர்சித்துப் பேசுகையில், “வாய்ப்புகளுக்காகச் சுற்றுபவர்களிடம் (விஜய்) எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

Advertisment

பல கட்சிகளில் இருந்து வந்த சந்தர்ப்பவாதிகளைக் கொண்டுள்ள த.வெ.க தூய கட்சி அல்ல. அது கலப்பட கட்சி. கலப்பட கட்சி என்று சொல்கிறேன் எப்படி என்றால் இன்னொரு (அதிமுக) கட்சியில இருந்து செங்கோட்டையன் சென்றுள்ளார். இந்த கட்சியில் கொள்கை இல்லையென்று உங்களிடம் வந்துள்ளார். ஆதவ அர்ஜுனா பல கட்சியில் இருந்து வந்தவர். இன்னொருவர் பாஜகவில் இருந்து வந்தார். அதன் பின்னர் அதிமுகவில் இணைந்தார். அப்புறம் த.வெ.க.வில் இணைந்துள்ளார். இப்படி எங்கே வாய்ப்பு கிடைக்கிறது  என்று சுற்றுகின்ற ஒரு கூட்டம் உன்னிடத்திலேயே வந்திருக்கிறது. நீங்கள் (விஜய்) ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” எனப் பேசினார்.