Advertisment

ஆப்ரேஷன் ‘ரோலக்ஸ்’; அச்சத்தில் இருந்த மக்கள் ; கச்சிதமாக முடித்த வனத்துறையினர்!

Untitled-1

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால், மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக, நரசிபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து கொண்டிருந்தது. விலையுயர்ந்த நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருவதாக புகார் எழுந்தது. அந்த யானையை உள்ளூர் மக்கள் "ரோலக்ஸ்" என்று பெயரிட்டனர்.

Advertisment

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக, வனத்துறையினர் பொள்ளாச்சி, டாப்ஸ்லிப்பில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்ற இரண்டு கும்கி யானைகளை அழைத்து வந்திருந்தனர். வன மருத்துவர் விஜயராகவன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார். அப்போது, அந்த யானை அவரை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு காரணமாக, "ஆபரேஷன் ரோலக்ஸ்" தற்காலிகமாக தள்ளிப்போகப்பட்டது.

Advertisment

இந்நிலையில், கும்கி யானைகளான நரசிம்மன் மற்றும் முத்துவிற்கு திடீரென மதம் பிடித்தது. பாதுகாப்பு கருதி, அந்த இரண்டு யானைகளும் மீண்டும் டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டன. அவற்றிற்கு பதிலாக, டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை கோவைக்கு அழைத்து வந்தனர்.

ஏற்கனவே, கபில்தேவ் என்ற கும்கி யானை கோவைக்கு அழைத்து வரப்பட்டது. இந்த இரண்டு யானைகளின் உதவியுடன், ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்க முயற்சி நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற இரண்டு காட்டு யானைகள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து, கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் என்ற நான்கு கும்கி யானைகளின் உதவியுடன், அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே, முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர், ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

இதை அடுத்து, கபில்தேவ், வசீம், பொம்மன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய நான்கு யானைகளுடன், வனத்துறையினர் மற்றும் போலீஸார் சேர்ந்து, அந்த யானையை கட்டி வாகனத்தில் ஏற்றி, முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டதால், அப்பகுதி விவசாயிகள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. 

elephant Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe