திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள தமிழக - கேரளா எல்லைப் பகுதியான சின்னார் பகுதியில் கேரளா மாநில வனத்துறையினர் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி (30.07.2025) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேல்குருமலை செட்டில்மென்ட் என்ற பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சிறுத்தை பல்லை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறி கேரள வனத்துறையினர் அவரை பிடித்தனர். இதனையடுத்து கேரள வனத்துறையினர் தமிழக வனத்துறையினரிடம் அவரை ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisment

இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை மேற்கொள்வதற்காக உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு மாரிமுத்து அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து வனத்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள ஓய்வறையில் உள்ள கழிவறையை மாரிமுத்து பயன்படுத்துவதற்காக ஜூலை 31ஆம் தேதி (31.07.2025) காலை அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் எதிர்பாராத விதமாக உள்பக்கமாக தாழிட்டு தற்கொலை செய்து கொண்டதாக  வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மாரிமுத்துவின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் சம்பவ இடத்தில் கோட்டாட்சியர், உடுமலை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தினர். உடுமலைப்பேட்டையில் சிறுத்தை பல்லை விற்க முயன்றதாக வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் உயிரிழந்த மாரிமுத்துவின் மனைவி, “மாரிமுத்து தற்கொலை செய்து கொள்ளக்கூடிய எண்ணத்தில் இல்லை; வனத்துறையினர் துன்புறுத்தியதால் அவர் தூக்கிட்டிருக்கலாம்; அல்லது அடித்துத் துன்புறுத்திக் கொன்றிருக்கலாம்”என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தார். 

இதனையடுத்து மாரிமுத்துவின் உடலானது உடற்கூறாய்வுக்காக திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நேற்று (01.08.2025) உடற்கூறாய்வு நடைபெற்றது. அப்போது மாரிமுத்துவின் தலை மற்றும் நெற்றிப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து மருத்துவ அறிக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடற்கூறாய்வு நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உடுமலைப்பேட்டை வனத்துறை வனவர் நிமல் மற்றும் வனகாவலர் செந்தில்குமார் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment