தூத்துக்குடி மாவட்டம் குருமலை வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் புள்ளி மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகாமையில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய நிலங்களை நோக்கியும் சென்று வருவதுண்டு. இந்நிலையில், குருமலையைச் சுற்றியுள்ள கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் வேட்டை நாய்களைப் பயன்படுத்தி சிலர் முயல்கள், மான்கள், மயில்கள் ஆகியவற்றை வேட்டையாடி சமைத்து விருந்து நடத்தி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ராமன், கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வனவர் பிரசன்னா ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் குருமலை, ஊத்துப்பட்டி, பாறைப்பட்டி, கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சூழலில், கடம்பூர் அருகிலுள்ள கொத்தாளி கிராமத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் முத்துப்பாண்டியின் தோட்டத்தில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முயல் கறி, மான் கறி, மயில் கறி, காடை, கவுதாரி உள்ளிட்ட விதவிதமான அசைவ விருந்து நள்ளிரவு வரை களைகட்டுவதாக ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில், ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அன்று இரவு நேரத்தில் வனத்துறை அதிகாரிகள், முத்துப்பாண்டியின் தோட்டத்துக்குள் அதிரடியாகச் நுழைந்து சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையின்போது, புள்ளி மானின் நான்கு கால்களை அங்கிருந்து கைப்பற்றினர். தோட்டத்தின் மையத்தில் மது மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த முத்துப்பாண்டியை வனத்துறையினர் தட்டி எழுப்பி விசாரணை நடத்தினர். அப்போது, மது மயக்கத்தில் இருந்த முத்துப்பாண்டி மாறி மாறிப் பேசியதால், அவர் மயக்கம் தெளியும் வரை வனத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.
பின்னர், அடுத்த நாள்(18.8.2025) காலையில் மீண்டும் விசாரணையைத் தொடர்ந்தனர். முதலில், “நாய் கடித்து குதறி தோட்டத்தில் செத்துக் கிடந்த புள்ளி மானைத்தான் எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டேன்” என முத்துப்பாண்டி உளறி உள்ளார். இதை நம்பாத வனத்துறையினர், தங்களது வழக்கமான முறையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, வேட்டை நாய்களைப் பயன்படுத்தி மானை வேட்டையாடி, கூட்டாளிகளுக்கும் தொழில் பங்குதாரர்களுக்கும் விருந்து அளித்தது அம்பலமானது.
இதையடுத்து, ரியல் எஸ்டேட் அதிபர் பன்னீர்குளம் முத்துப்பாண்டியை கைது செய்த வனத்துறையினர், அவரை கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், முத்துப்பாண்டிக்கு உடந்தையாக இருந்த திருநெல்வேலி மாவட்டம் குறிச்சிகுளத்தைச் சேர்ந்த சுடலைமணி என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ள தனது கூட்டாளிகளுக்கும், பங்குதாரர்களுக்கும் விதவிதமான மதுபானங்களும், மான் கறி விருந்தும் வழங்கி, அவர்களை மகிழ்வித்து, சிக்கலான வணிக ஒப்பந்தங்களை எளிதாக முடிப்பதை முத்துப்பாண்டி வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி