இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களை தவிர்த்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ஆளுநருக்கும், அம்மாநில அரசுக்கும் இடையிலான மோதல்போக்கு என்பது தொடர்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்று, 2021 ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. இதனையடுத்து, அதே ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற நாள் முதலிருந்தே தமிழக அரசு கொண்டு வரும் தீர்மானகளுக்கு கையெழுத்திடாமல் இருப்பது, சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்வது, அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது போன்ற அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் செயல்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். 

Advertisment

இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல கேரளாவிலும் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசிற்கும், அம்மாநில ஆளுநர் தொடர்ந்து பல வகைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக செய்திகளும் வெளியாகின. இது சம்பந்தமாக கேரளா அரசு நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்த நிலையில், தற்போது கர்நாடகாவிலும் ஆளும் காங்கிரஸ் அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கவிருந்த நிலையில், இதில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சட்டசபை நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில், மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பெயர் மற்றும் விதிகளில் மாற்றம் செய்வதற்கு எதிராக கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக கூறப்பட்டது. அதனால் ஆளுநர் உரையில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதால் அம்மாநில ஆளுநர் இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்க இருப்பதாக செய்தி வெளியாகின.

இந்த நிலையில், இன்று காலை தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வருகை தந்தார். சட்டசபை கூடியதும், ஆளுநர் உரையில் முதல் மற்றும் இறுதி வரிகளை மட்டுமே வாசித்துவிட்டு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட் வெளிநடப்பு செய்தார். அப்போது, அவரை தடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உரையை முழுமையாக வாசிக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அதை ஏற்க மறுத்த ஆளுநர் அங்கிருந்து வெளியேறினார். இந்த விவகாரம் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisment

ஆளுநரின் இந்த முடிவிற்கு எதிராக நீதிமன்றத்தை அணுக கர்நாடக அரசுத்தரப்பில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம், அம்மாநில அரசு புகார் அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே தாவர்சந்த் கெலாட் கர்நாடக அரசு கொண்டுவந்த பல மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.