நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் உள்ள அன்னை சத்யா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அதாவது விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் குறைந்த விலைக்குச் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்த புகாரை அடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த விவகாரம் பேசு பொருளாகி இருந்த நிலையில் அதேபகுதியில் கல்லீரல் திருட்டும் நடந்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுநீரகம் விற்பனை தொடர்பாக விசாரித்து வரும் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ராஜமோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே இந்த கல்லீரல் திருட்டு தொடர்பான விவகாரத்தை கையிலெடுத்து வருகின்றனர்  கல்லீரல் திருட்டு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க தமிழக மருத்துவ நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விசைத்தறி இயக்கி வந்த பெண் ஒருவர் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தவித்து வந்த நிலையில் சென்னையில் கிட்னியை விற்க முயன்றுள்ளார். ஆனால் கிட்னியை விற்கமுடியாததால் கல்லீரல் கொடுத்தால் எட்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் என புரோக்கர்கள் சொன்னதைக்  கேட்டு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கல்லீரலை விற்றுள்ளார். தற்போது தன்னால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்தே கிட்னி திருட்டு போல கல்லீரல் திருட்டும் நாமக்கல்லில் பூதாகரமாகி இருக்கிறது.