தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் அடுத்த ஆறு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், தெற்கு கேரளா, குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுகிறது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. வரும் அக்டோபர் 21ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடலில் மண்டலமாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றுக்கு நடுவே உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்த நிலையில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் அருகிலேயே இருந்த கூரை ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. கோவில் வளாகத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த இருவரை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.