தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிக்கு தடை விதிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர் பச்சையப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் 2023 ஆம் ஆண்டில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் கொடியை உருவாக்க திட்டமிட்டு அதற்காக தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டதாகவும் இதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு இருப்பதால் மக்களிடம் அது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தை கொண்ட கொடியை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு கொடியை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்த தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் விஜய் தரப்பு இதுகுறித்து ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.