கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ளது அத்திப்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தில் ஜூலை 20-ம் தேதி காலை, சொகுசு காரில் திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கி விழுப்புரம் ஆயுதப்படை காவலர் மாதவன் (வயது 44) தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அத்திப்பாக்கம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நிலைதடுமாறிய கார் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே, சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.
அதிவேகத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததால், பாதிப்பு அதிகமாக இருந்தது; கார் முற்றிலும் நொறுங்கியிருந்தது. காரில் சீட் பெல்ட் அணியாததால் பாதிப்பு மேலும் அதிகரித்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஆயுதப்படை காவலர் மாதவனின் குடும்பத்தினர் சங்கீதா (38), சுபா (55), தனலட்சுமி (70), ராகவேந்திரன் (20) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த ஆயுதப்படை காவலர் மாதவன் உட்பட ஐந்து பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமடைந்தார்.
இந்த விபத்தில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணலூர்பேட்டை காவல்துறையினர், நிகழ்வு நடந்த இடத்திற்குச் சென்று வாகனத்தை மீட்டு, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.