இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் கடந்த 1875ஆம் ஆண்டு பங்கிம்சந்திர சாட்டர்ஜி என்பவரால் இயற்றப்பட்டது. இந்த பாடலின் 150வது ஆண்டு விழாவை கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் முறைப்படி தொடங்கி வைத்தார். அதோடு 5 ரூபாய் மதிப்பிலான சிறப்புத் தபால் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், இதற்கான கொண்டாட்டங்கள் வரும் நவம்பர் மாதம் வரை என ஓராண்டுக்கு கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது வந்தே மாதரம் பாடலின்150வது ஆண்டு விழா குறித்த விவாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக குடியரசு தின அணிவகுப்பில் வந்தே மாதரம் பாடலை மையமாகக் கொண்ட அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டது. அதோடு வந்தே மாதரம் இப்பாடலைப் மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பகுதியாக வந்தே மாதரத்தை, இந்திய தேசியக் கொடி ஏற்றும் போதும், குடியரசுத் தலைவரின் வருகையின் போதும், அவரது உரைகளுக்கு முன்னும் பின்னும், மற்றும் மாநில ஆளுநர்களின் உரைகளின் போது என பல்வேறு அரசு அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் ஒலிக்கவோ, பாடவோ வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஆறு பத்திகளைக் கொண்ட, 3 நிமிடங்கள் 10 வினாடிகள் கால அளவில் கொண்ட பதிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதோடு வந்தே மாதரம் பாடப்படும்போது அல்லது இசைக்கப்படும்போது, பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். இருப்பினும், செய்திச் சுருள் (newsreel) அல்லது ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக இந்தப் பாடல் திரையிடப்படும்போது, பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அவ்வாறு எழுந்து நிற்பது படத்தின் ஓட்டத்திற்கு தடையுண்டாக்குவதோடு, பாடலுக்கு கண்ணியத்தைச் சேர்ப்பதற்குப் பதிலாக குழப்பத்தையே ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/11/vandae-madharam-2026-02-11-12-14-11.jpg)
இது குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள 10 பக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில் தேசியப் பாடலும், நாட்டின் தேசிய கீதமான ஜன கன மன பாடலும் ஒன்றாக இசைக்கப்படும்போது, வந்தே மாதரம் முதலில் இசைக்கப்பட வேண்டும் என்றும், அப்போது பொதுமக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிக் கூட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் வந்தே மாதம் இசைக்கப்பட வேண்டிய இடங்கள் மற்றும் நிகழ்வுகளின் பட்டியலையும் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
Follow Us