பீகார் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06-11-25) காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில், 121 தொகுதிகளில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணி, பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் என மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் ஆர்ஜேடி கட்சியின் தலைவரும் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பாஜக தலைவர்கள் மற்றும் அம்மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் முதற்கட்ட வாக்குப்பதிவில் உள்ளடக்கியுள்ளன. மேலும் பல உயர் தலைவர்கள் இந்த கட்ட வாக்குப்பதிவிற்கான களத்தில் இருந்தனர்.
இதனையொட்டி வாக்காளர்கள், இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 5 மணியுடன் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு பிறகு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏராளமான வாக்காளர்கள் இன்று காலை முதல் வாக்களித்த நிலையில், மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்த நிலையில், 122 தொகுதிகள் உள்ளடக்கிய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று சுமார் 2 லட்சம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/biharelec-2025-11-06-17-40-14.jpg)