தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.

Advertisment

அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் பாமகவில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என்ற தலைப்பில் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

அந்த வரிசையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் தொடங்கினார்.

இந்நிலையில் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (04/08/2025) சென்னை ஆவடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எங்கள் கட்சியை நாங்கள் இப்பொழுது வலுப்படுத்த வேண்டி இருக்கிறது. கடைகக்கோடியில் இருக்கும் தொண்டனையும் சந்தித்து, கட்சி நிர்வாகிகளை சந்தித்து பூத் கமிட்டிகள் அமைத்து எங்கள் கழகத்தை வலுப்படுத்த வேண்டும். எங்கள் கழகத்தின் முன்னேற்றத்தை தான் நாங்கள் கோலாக வைத்து பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு 5 முதல் 6 மாதம் ஆகும்.

Advertisment

தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 தொகுதிகளுக்கும் நேரடியாக செல்ல இருக்கிறோம். அதற்கு முன் விஜயகாந்தின் பிறந்தநாள், கட்சி நாள், விஜயகாந்தின் இரண்டாவது குருபூஜை எல்லாம் வர இருக்கிறது. ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நான் ஏற்கனவே சொன்னதுபோல மிகப்பெரிய மாநாடு கூட்ட இருக்கிறோம். அதற்குள் நிச்சயமாக கூட்டணி முடிவு செய்யப்படும். அந்த மாநாட்டில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பு உங்களுக்கு நிச்சயமாக தேமுதிக சார்பில் கொடுக்கப்படும்' என்றார்.

'தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நெல்லையில் நடந்த ஆணவப் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், ''இல்லை இல்லை. அவர் இப்பொழுதுதான் வந்திருக்கிறார். உடனே கண்டனம் தெரிவிப்பாரா? அதெல்லாம் இப்பொழு எதிர்பார்க்கவே முடியாது. முதலில் அவர் களத்திற்கு வர வேண்டும். செய்தியாளர் சந்திப்பை அவர் அட்டென்ட் பண்ணனும். அதற்கடுத்து ஒவ்வொரு நிகழ்வைப் பார்த்த பிறகு தான் நாம் சொல்ல முடியும். அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று என்னிடம் நீங்கள் கேட்கக்கூடாது. இதை நீங்கள் தவெக நிர்வாகிகளிடம் கேட்க வேண்டும்'' என்றார்.