சென்னையை அடுத்துள்ள பள்ளிகரணை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிரபல பர்னிச்சர் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (30.11.2025) அதிகாலை 01:30 மணியளவில் யாரும் எதிர்பாராத விதமாக பர்னிச்சர் கடையின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது கடையில் உள்ள பிற பகுதியிலும் பரவியது. மேலும் அருகில் உள்ள பகுதிக்கும் தீயானது பரவியது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
அச்சமயத்தில் அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் பிரியதர்சினி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதாவது ஹைட்ராலிக் லிப்ட் உதவியுடன் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அதிகாலை 05:30 மணியளவில் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கடையில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு நுரை மூலம் கட்டடத்தில் உள்ள வெப்பத்தைத் தணிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தானது மின்கசிவு காரணமாக நடைபெற்றதா அல்லது வேறு காரணமா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us