அண்மையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் தொடர்ச்சியாக விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பயணங்கள் ஒத்தி வைக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது.
நேற்று (22/07/2025) ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த AI 315 என்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விமானம் டெல்லி விமான நிலையத்தில் வந்து தரை இறங்கி பார்க்கிங் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பிடித்தது. இந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனமும் உறுதி செய்தது. 'விமானத்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளது. விமான பயணிகள், விமான சிப்பந்திகள், விமானிகள் என அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என ஏர் இந்தியா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (23/07/2025) அகமதாபாத்தில் இருந்து கோவா புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் 60 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விமானத்தின் என்ஜின் பகுதியில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட விமான பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.