ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மோரி என்ற கிராமத்தில் ஐந்து கிணறுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு கிணற்றில் உள்ள குழாயில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இந்த கசிவால் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மோரி கிராமத்திற்கு, ராஜமுந்திரியில் இருந்து ஓஎன்ஜிசி-யின் மூத்த அதிகாரிகள் விரைந்தனர். "உற்பத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டீப் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படும் மோரி-5 கிணற்றில் எரிவாயு குழாய் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisment

கோனசீமா மாவட்ட நிர்வாகமும் நிலைமையைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்தில் உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. மேலும் பாதிப்புகள் மற்ற இடங்களுக்கு பரவி  பாதிப்புகள் அதிகரிக்காமல் தடுக்க தீயணைப்பு முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ராஜமுந்திரியில் இருந்து ஓஎன்ஜிசி-யின் மூத்த அதிகாரிகள், மோரி-5 கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மோரி கிராமத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். டீப் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  நிறுவனம் சுமார் ஒரு வருடமாக மோரி-5 கிணற்றை இயக்கி வருகிறது. இந்த கிணற்றில் தான் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறினார்.

Advertisment

ஓஎன்ஜிசி-யின் உற்பத்தி மேம்பாட்டு ஒப்பந்ததாரரான (PEC) டீப் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓஎன்ஜிசி-யின் ராஜமுந்திரி உற்பத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 2024-ல் ரூ.1,402 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றிருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.