நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஹோட்டல் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அங்கு புகைமூட்டம் சூழ்ந்ததால் மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கீழ்காலனி பகுதியில் வைத்தியலிங்கம், சீனி என்ற இருவர் 10 வருடமாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தனர். இன்று காலை வழக்கம்போல ஹோட்டலில் பரோட்டா போட்டுக் கொண்டிருந்த பொழுது அடுப்பில் இருந்து வெளியேறிய தீப்பொறி அருகில் இருந்த ஓலை மற்றும் மற்ற பொருட்கள் மீது பட்டு தீபற்றி எரிந்தது. உடனடியாக தீ மளமளவென வேகமாக பரவியது.
இதனால் கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் உணவு அருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் என அனைவரும் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். தீ முழுவதும் கடைக்குள் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் புகைமூட்டம் சூழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணியானது நடைபெற்றது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.