உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(20). இவர் சென்னை துறைமுகத்தில் இருந்து பெங்களூருக்கு ரூ.1.8 கோடி மற்றும் ரூ.3.60 கோடி மதிப்பிலான இரண்டு கார்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு வேலூர் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரியை வளைத்துள்ளார். அப்போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த காலி இடத்தில் லாரி சிக்கியுள்ளது. ஆனால், அதன் பின்னர் லாரியை வெளியே எடுக்க முடியாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் லாரிக்கு மேலே சென்ற மின் கம்பி காற்றில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது. கண்டைனர் லாரி மீது மின்சாரம் பாய்ந்து டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரியின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்த நிலையில் விரைந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
தகவல் அறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்தனர். இருந்தபோதிலும் லாரி முன்பக்க பகுதி முற்றிலும் தீயில் எறிந்து நாசமானது. இந்த தீ விபத்தால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட போது, லாரியில் இருந்த இரண்டு காருக்கும் ஓட்டுனருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.