ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே காந்திநகரில் தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இக்கம்பெனியின் வளாகத்திற்குள் சுமார் பத்து டன் அளவிற்கு கழிவு பனியன் துணிகள் கொட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நள்ளிரவில் பனியன் கம்பெனியின் கழிவு பனியன் துணிகள் கொட்டப்பட்டிருந்த பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார் ஆனால் முடியவில்லை இதையடுத்து இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. என்னிலும் இந்த தீ விபத்தில் பனியன் கம்பெனி வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த 10 டன் கழிவு பனியன் துணிகள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.