ஈரோடு வெண்டிபாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட புகைமூட்டம், மோளக்கவுண்டம்பாளையம், கோணவாய்க்கால், காந்திபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சூழ்ந்ததது. குப்பைக் கிடங்கு ஊழியர்கள் அளித்த தகவலின் படி, ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து, முதலில் இரண்டு வாகனத்திலும், பின் கூடுதலாக மூன்று வாகனத்திலும் வந்த 25 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அருகில் இருந்த குப்பைகளுக்கு தீ பரவிக் கொண்டே இருந்தது. இதனிடையே, மாநகராட்சி ஆணையர் அர்பித்ஜெயின் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, பணிகளை துரிதப்படுத்தினர். பின், சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்கு, பிறகு தீயை மட்டும் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும், புகை மட்டும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. இந்த புகை தீயாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதால், அதனைக் கட்டுப்படும் பணியை, தீயணைப்பு வீரர்கள் துவங்கினர். அவர்களுக்கு உதவியாக, கிடங்கு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணி, நேற்று முன்தினம் மாலையில் இருந்து துவங்கி, நேற்று மதியம் மூன்று மணிக்கு நிறைவடைந்தது.
புகை முழுவதும் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, கிடங்கில் இருந்த குப்பைகள் அனைத்தையும், ஈரமாக்கும் பணிகளும் நடந்து முடிந்தது. தீயணைக்கட்டும் தொடர்ந்து புகை வந்ததால் மக்களை அவதி அடைந்தனர். கிட்டத்தட்ட 28 மணி நேரத்திற்கு பிறகு புகையும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது குறித்து பகுதி மக்கள் கூறும்போது, 'வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது. தீ விபத்தில் நடக்கும் போதெல்லாம் எங்கள் பகுதி மக்கள் அங்கிருந்து வரும் புகையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம் ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.