சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி (28.06.2025) நகை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின் போது போலீசார் அவரை கடுமையாக தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த வழக்கைத் சி.பி.ஐ. விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியியுள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எஸ்.பி. சுகுமாரன் தலைமையிலான போலீசாரின் திருத்தப்பட்ட புதிய முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “தனிப்படையில் இருந்த காவலர்கள் முதற்கட்டமாகத் திருப்புவனம் அரசு மருத்துவமனை, பின்னர் சிவகங்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் அங்கிருந்து தனிப்படை காவலர்களான ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய இருவரும் அஜித்குமாரை ஆம்புலன்ஸ் கொண்டு வந்து 28.06.2025ஆம் தேதி 23.15 மணிக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர் பரிசோதித்து விட்டு அஜித்குமார் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாகத் தனிப்படை காவலர்கள் 1.ராஜா 2. ஆனந்த 3.சங்கர மணிகண்டன் 4.பிரபு 5.கண்ணன் ஆகிய 5 பேரும் குற்ற எண். 302/25 திருட்டு வழக்கில் சந்தேகத்திற்குள்ளான நபரான அஜித்குமார் என்பவரைத் தன்னிச்சையாக தங்கள் பொறுப்பில் வைத்திருந்ததுடன் அஜித்குமார் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து தங்களை அலைக்கழிப்பு செய்வதாகவும் எண்ணி இவர்களுக்கு திடீரென்று ஏற்பட்ட கோபம் காரணமாகவும் மேலும் அஜித்குமாரை அடித்து உண்மையை வர வைக்கவேண்டும் என்ற ஆத்திரத்துடனும் மேலும் ஒருவரை மூர்க்கத்தனமாகத் தாக்கினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்தும் மேற்படி ஐந்து தனிப்படை காவலர்கள் சேர்ந்து அஜீத்குமாரைத் தாக்கி அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி கொலைக்குற்றம் புரிந்துள்ளனர் என்பது எனது விசாரணையில் தெளிவாகத் தெளிவாக புலனாகிறது. மேலும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கைக்கான புகார்தாரர் கண்ணன் என்பவர் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி என விசாரணையில் கண்டறியப்பட்டதால் அவரை வாதியிலிருந்து நீக்கம் செய்து இவ்வழக்கின் விசாரணையில் கண்டறியப்பட்ட சம்பவ இட நேரடி சாட்சியான நவீன்குமார் என்பவரே வாதியாகப் பாவிக்கப்படுகிறது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.