ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் கமுதக்குடி சுந்தரவல்லியம்மன் கோவிலுக்கு குலசேகரப்பாண்டியன் கி.பி.1618-ல் கொடுத்த செப்புப் பட்டையத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.
கமுதக்குடி, சுந்தரவல்லியம்மன் கோயில், பூசாரி தங்கவேலுவிடம் ஒரு செப்புப் பட்டையம் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அதைப் படித்து ஆய்வு செய்தார்.
இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது, 'கைப்பிடியுடன் 17 செ.மீ நீளம், 9.5 செ.மீ அகலம், 400 கிராம் எடையுடன் அளவில் சிறியதாக உள்ள செப்புப் பட்டையம், 37 வரிகளில் சுவசுதிரிமன் எனத் தொடங்கி சுந்தரேசுபர் சகாயம் என முடிகிறது.
இதில் கலியுக ஆண்டு 2810-ம், பிங்கள ஆண்டு மாசி மாதம் 20-ம் நாளும் உள்ளது. கலியுக ஆண்டு தவறாக உள்ளது. தமிழ் ஆண்டு மற்றும் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் கி.பி.1618 எனலாம். பட்டையத்தில் இவ்வூர் கமுதாபுரி எனப்படுகிறது.
மன்னர் குலசேகரப் பாண்டியன், மதுரை மண்டலம், வானர் வீரவகை வளநாட்டில், உத்தராயணம், பூர்வபட்சம், சதுர்த்தசி, திருவோண நட்சத்திரம் உள்ள சுபதினத்தில், கமுதாபுரி வட்டகையில் மேலேந்தலுக்கு அருகில், குளக்குமேல்பட்டி வட்டகையில் சேர்ந்த ஏந்தலாயிருந்த பகுதிக்கு சுந்தனேந்தல் என்று பெயரிட்டு, அக்கிராம கண்மாய் மற்றும் கீத்துமடை மூலம் நீர் பாய்ந்து சாகுபடியாகும் 70 விரையடி நிலத்தின் மூலம் குளப் பிரமாணமாக (நிலவரி) வரும், ஒரு கலம், 4 மரக்கால், ஒரு மா அளவுள்ள தானியம், அதனுடன் பூசைக்கு 30 குறுக்கம் நிலம் ஆகியவற்றை கமுதக்குடி பிடாரி சுந்தரவல்லி பராசத்தி கோயில் நித்திய பூசைக்குத் தானமாக கொடுத்துள்ளார்.
சுந்தனேந்தல், வைகை ஆத்துக்கு தெற்கிலும், தெளிசாத்தநல்லூருக்கு மேற்கிலும், பொதுவக்குடிக்கு வடக்கிலும் இருப்பதாக பட்டையத்தில் கூறப்பட்டுள்ளது. சுந்தரவல்லி பராசத்தி நித்திய பூசைக் கட்டளையை சூரியன், சந்திரன் உள்ளவரைக்கும், கோயில் நம்பியான் சுந்தபண்டாரம் நடத்தி வரவேண்டும். இத்தானத்தை யாரும் அடி அழிவு செய்யக் கூடாது என முடிவில் கூறப்பட்டுள்ளது. ஒரு கலம், 4 மரக்கால், ஒரு மா ஆகிய முகத்தல் அளவுகள் ‘க௱, த, ப’ என குறியீடுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
கி.பி.10-11-ம் நூற்றாண்டுகளில் வானவீரவளநாடு, மானவீரவளநாடு எனப்பட்ட இவ்வூர் பகுதி, கி.பி.1618-ல் வானர்வீரவகை வளநாடு என மாற்றம் பெற்றுள்ளது. குலசேகரபாண்டியன், வானர்வீரவகை வளநாட்டுப் பகுதியை மட்டும் ஆட்சி செய்த பாண்டிய வம்சாவளியினராக இருக்கலாம்.
இவ்வூர் அருகில் மேலப்பெருங்கரை கோயிலில் உள்ள கி.பி. 1674-ம் ஆண்டு கல்வெட்டின் படி, திருமலை சேதுபதியின் காலத்திற்கு முன்பு வரை பாண்டியர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததாகக் கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.