சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில், கும்மங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமைந்துள்ள காரைக்குடி திருப்பத்தூர் சாலையில் நேற்று (30.11.2025) பிற்பகல் அறந்தாங்கியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே சமயம் திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி மற்றொரு அரசுப் பேருந்தும் சென்றுக் கொண்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இந்த இரு பேருந்துகளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த 9 பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 11 நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்தனர்
இதனையடுத்து இந்த விபத்தில், காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அரசு மருத்துவர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தீவிர சிகிச்சை வழங்கப்பட வேண்டியவர்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.
அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்திருந்தார். மேலும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு, அமைச்சர்கள் கே. ஆர். பெரியகருப்பன், எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் இன்று (30.11.2025) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/01/svg-bus-hos-min-2025-12-01-10-33-19.jpg)
அதனைத் தொடர்ந்து அவர்களின் குடும்பத்தினருக்கு, ரூ. 3 இலட்சம் நிவாரண நிதியுதவிக்கான காசோலையினை வழங்கினர். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கா. பொற்கொடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தே. ஜெஃபி கிரேசியா உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். முன்னதாக இந்த விபத்தில் காயமடைந்து, காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்தனர். அப்போது, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், உட்பட பலர் உடன் இருந்தனர்.
Follow Us