இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ், ஆர்யா நடிப்பில் ‘வேட்டுவம்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம் மற்றும் விழுந்தமாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. அந்த வகையில் விழுந்தம்பாடி கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது காரை இயக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்பு சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குன்றத்தூர் அடுத்துள்ள பூந்தாண்டலம் பகுதியில் உள்ள வீட்டில் ஸ்டன்ட் மாஸ்டர் எஸ்.மோகன்ராஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அவருடைய உடலுக்கு இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா, தினேஷ் மற்றும் படப்பிடிப்பு குழுவில் இருந்த அனைவரும் அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இன்று மதியத்திற்கு மேல் இறுதி அஞ்சலி நடைபெறும் என உயிரிழந்த ஸ்டன்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.