இந்தியா- பாகிஸ்தான், செர்பியா - கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா, ஆகிய போரை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைய ட்ரம்ப் வகித்த பங்கு முக்கியமானது என குறிப்பிட்டு பாகிஸ்தான் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கம்போடிய பிரதர்ம் ஹின்மோனட் ஆகியோர் டிரம்புக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என நோபல் கமிட்டிக்கு பரிந்துரைகளை அனுப்பினர்.
அதனை தொடர்ந்து, அர்மேனியா - அஜர்பைஜான் இடையிலான போர் பதற்றத்தை டொனால்ட் டிரம்ப் நிறுத்தி இருநாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தை போட்டார். இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்வு காண உதவிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இரு நாடுகளின் தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அவர்கள், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என பரிந்துரைத்தனர்.
அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோ என்ற பெண்ணுக்கு கிடைத்தது. இதனால், டிரம்ப் பெரிதும் ஏமாற்றமடைந்து போனார்.
இந்த நிலையில், ஃபிஃபா (FIFA) எனும் கால்பந்து அமைப்பு அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கியுள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிப்பெற்ற அணிகளை குழுக்களாக பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் டொனால்ட் டிரம்புக்கு 2025ஆம் ஆண்டுக்கான அமைதி பரிசு வழங்கப்பட்டது. ஃபிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபண்டினோவும், அதிபர் டிரம்பும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/trumpfifa-2025-12-06-20-05-56.jpg)