Female volunteers make sensational complaint against madurai TVK District Secretary
கட்சித் தொடங்கிய காலம் முதல் தொர்ந்து சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் குறைவில்லாமல் இருந்து வருகிறது விஜய்யின் தவெக. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்மரமாக இருக்கும் நிலையில், சர்ச்சைகளுடனும், உட்கட்சி பூசலால் கட்சி நிர்வாகிகளிடம் போராடிக்கொண்டிருக்கிறது தவெக. சமீபத்தில் நாமக்கல் மாவட்டச் செயலாளர், ஒரு பெண் நிர்வாகியுடன் அத்துமீறி நடந்துகொண்டதாக எழுந்த சர்ச்சை ஓய்ந்து அடங்குவதற்குள், தூத்துக்குடியைச் சேர்ந்த தவெகவின் பெண் நிர்வாகி அஜிதா, தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் பனையூரில் கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜய் செல்லும் காரை மறித்தார் . இது குறித்து வந்த செய்திகளில், அஜிதாவிற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்காததால் அவர் அதிருப்தியடைந்துள்ளார் என்றும், அதனால் தான் அவர் அப்படி நடந்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தவெகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை விஜயன்பன் மீது தொண்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தங்களை உருவ கேலி செய்ததாக பெண் தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் நிர்வாகிகளுக்கு பதவி வழங்குவதற்கு 5 லட்சம் முதல் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மதம் மற்றும் சாதி பார்த்து பதவிகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து அவரிடம் சொன்னால், அதையும் கேலி செய்து அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வதாக கூறுகின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் இந்த போக்கினைக் கண்டித்து, விசாலாட்சிபுரம் காலங்கரையைச் தவெக தொண்டர்கள் மாவட்டச் செயலாளருக்கு எதிராக போராட்டங்களை நடத்தியதோடு, அவருக்கெதிராக கோஷங்களையும் எழுப்பினர். தொடர்ந்து, மோசமான செயல்களில் ஈடுபட்டு வரும் மாவட்ட செயலாளர் விஜயன்பன் மீது, தவெக தலைவர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சொந்த கட்சிகளுக்குள்ளேயே இவ்வளவு சிக்கல்களை வைத்திருக்கும் தவெக எப்படி எதிர்கட்சிகளை சமாளிக்கப்போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow Us