தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போக்குவரத்துக் காவல் பிரிவில் எஸ்.ஐ.யாகப் பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்நிலையில் ராஜலட்சுமி அக்டோபர் 24 ஆம் தேதி கோவில்பட்டி கிழக்குக் காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்.

Advertisment

அந்தப் புகாரில், “எனது கணவர் செல்வகுமார், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக கோவில்பட்டி போக்குவரத்துக் காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தார். அதே பிரிவில் வான்மதி என்ற பெண் போலீஸ் கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாற்றில் இருந்து பணியிட மாற்றம் பெற்று இங்கு வந்து சேர்ந்தார் (இங்கு பெண் போலீஸின் நலன் கருதி அவரது பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அவருக்கு ஏற்கெனவே திருமணமாகிக் கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண் போலீஸ் வான்மதியும், நிருபர் ஒருவரும் சேர்ந்து எனது கணவரை மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

அந்தத் திட்டத்தின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ளாத எனது கணவரும் அந்தப் பெண் போலீசுடன் நெருங்கிப் பழகியுள்ளார். என் கணவர் நெருங்கிப் பேசிய வாட்ஸ்அப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை எல்லாம் மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்குடன் அந்தப் பெண் போலீஸ் தனது ஆண் நண்பரான மதன் என்பவரது மொபைல் போன் மூலம் ரெக்கார்ட் செய்து வந்துள்ளார். வெறும் மூன்றே மாதங்கள் மட்டுமே நீடித்த அந்த உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் ஆகஸ்ட் 13 ஆம் தேதி என் கணவரைத் தொடர்புகொண்ட பெண் காவலர் வான்மதி தன்னிடம் உள்ள ரகசிய வீடியோ ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க முதலில் ரூ.5 லட்சம் பணம் தரக் கேட்டு மிரட்டினார். இல்லையென்றால் அதனை வெளியிட்டு உன்னைப் பொது வெளியில் அசிங்கப்படுத்திவிடுவேன். சஸ்பெண்டில் செல்ல வைப்பேன். பணத்தைக் கொடுத்துவிட்டு ஊரைவிட்டு ஓடிப்போ... என மிரட்டினார்.

பணம் தர மறுக்கவே, செப்டம்பர் 6 ஆம் தேதி பெண் போலீஸ் வான்மதி எனது கணவர் சம்பந்தப்பட்ட ஒரு சில ஆடியோக்களை மட்டும் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் நானும் எனது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மீளாத துயரத்தில் நொறுங்கிப்போனோம். இப்பிரச்சனை தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு, என் கணவர் செல்வகுமாரும், அந்தப் பெண் போலீசும் தற்போது சஸ்பெண்டில் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் பெண் போலீஸ், எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னிடம் அசிங்கமாகப் பேசிப் பணம் கேட்டு மிரட்டிக் கொலை மிரட்டல் விடுத்தார். என் கணவரின் காரினை ஒரு கும்பலுடன் சேர்ந்து வந்து வழிமறித்துக் கொலை மிரட்டல் விடுத்தும், அதன் பிறகு செப்டம்பர் 17 ஆம் தேதி சமாதானப் பேச்சுவார்த்தை பேசலாம் வாருங்கள் எனக் கூறி என்னையும் என் உறவினர்களையும் வரவழைத்தார். அங்கு சென்றபோது, ‘40 க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் 20 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது, உன் கணவரின் ரகசிய ஆடியோ மற்றும் வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் ஒவ்வொன்றாக வெளியிடாமல் இருக்க ரூபாய் 10 லட்சம் பணம் தர வேண்டும்..’ என மிரட்டினார். பணத்தைத் தராவிட்டால் அசிங்கப்படுத்துவேன் எனத் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்.

நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் பெண் போலீஸ் வான்மதி, நிருபர் மற்றும் பெண் போலீசின் ஆண் நண்பர் மதன் ஆகியோர் திட்டமிட்டு நடத்தியுள்ளனர். எனவே பெண் போலீஸ் வான்மதி மீதும் அவருடன் கூட்டுச்சதி மற்றும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நிருபர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகார் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் பெண் போலீஸ், நிருபர் மற்றும் மதன்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது கோவில்பட்டி கிழக்குக் காவல்நிலைய எஸ்.ஐ. சந்தன மாரி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீஸ் டீம் விசாரணையை நடத்தி வருகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட பெண் போலீஸ், எஸ்.ஐ. செல்வகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டிப் பேசிய ஆடியோ வெளியாகிப் போலீஸ் வட்டாரத்தைக் கிறுகிறுக்க வைத்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல் உயரதிகாரிகள் சிலர், “அந்தப் பெண் போலீஸ் காக்கி சீருடையிலும், அந்த நிருபர்... பத்திரிக்கையாளர் என்ற போர்வையிலும் தில்லாலங்கடி வேலைகளைச் செய்து வருவதைத் தொழிலாகவே வைத்துள்ளனர். பஸ் டிரைவர், இன்ஜினியர், பைனான்சியர், அரசியல் பிரமுகர், கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ்.ஐ. என நிறைய இல்லீகல் தொடர்புகள் இருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தோண்டத் தோண்ட இருவர் மீதும் பல கிரைம் சம்பவங்கள் பூதம் போல வெளிவருகிறது. அந்த வரிசையில் இந்தச் சம்பவமும் அவதூறு பரப்புதல், சதித் திட்டம், இல்லீகல் கனெக்ஷன், ஆடியோ வீடியோ..., பத்து லட்சம் பணம் பேரம், கட்டப் பஞ்சாயத்து என இந்த வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது” என்றனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மற்றோரு ஆடியோவில் அந்த பெண் போலீஸ், டிஎஸ்பியை விமர்சித்ததோடு, அந்த டிஎஸ்பி மீது  ஐஜி அலுவலகத்தில் புகார் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.  பெண் காவலர் மற்றும்  எஸ்.ஐ. செல்வகுமார் இடையிலான இந்த விவகாரம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி