திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அனுமந்தபுரம் குடில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் மூலனூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த கவின்குமார் என்பவர் மூலனூர் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது தலைமைக் காவலர் லட்சுமிக்கும் கவின்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக கவின்குமார், தலைமைக் காவலர் லட்சுமி மீது திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த டி.எஸ்.பி. சுரேஷ்குமார், காவலர் லட்சுமியை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டார். அதன்படி, இன்று காவலர் லட்சுமி திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
அப்போது, டி.எஸ்.பி. சுரேஷ்குமார், பெண் காவலர் லட்சுமியை கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், ‘கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும், நெற்றியில் பட்டையும் போட்டுக்கிட்டு சாமியார் மாதிரி இருக்கிறாய்...’ என அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காவலர் லட்சுமி, டி.எஸ்.பி. அலுவலகத்தில் இருந்த கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை எடுத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை அறிந்த காவலர்கள், உடனடியாக லட்சுமியை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.