Female police officer arrested for cheating by playing Diwali lottery in cuddalore
தீபாவளி சீட்டு நடத்தி ரூ10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் காவலரை, காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநகராட்சி உட்பட்ட புது குப்பத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை சந்தித்து புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில், கடலூர் திருப்பாப்புலியூரில் தேரடி தெருவில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை வைத்திருக்கும் பிரபு மற்றும் கடலூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றும் அவரது மனைவி கோமளா ஆகிய இருவரும் தீபாவளி சீட்டு நடத்தி பண்ருட்டி புதுக்குப்பம், விருதாச்சலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பணம் வசூலித்து வந்தார். சீட்டு முடிந்த பிறகு பணம் கட்டியவர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பொருட்களை தராமல் ஏமாற்றி வருகிறார்கள். இதன்மூலம் 270 பேரிலும் ரூ 33 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் கேட்டபோது கடையை மூடிவிட்டு சென்று விட்டார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் பிரபுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபுவுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கோமளாவை குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று (04-10-25) மாலை கைது செய்துள்ளனர். தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்பவர்களை கண்டிக்கும் இடத்தில் இருக்கும் காவல்துறையை சேர்ந்தவர்களே, தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.