திருமணத்தை மீறிய உறவு, ஆண் நண்பர் குறித்து கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு பெண் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் அருகே உள்ள கொங்கராயனூர் பகுதியைச் சேர்ந்தவர், 26 வயதான சோனியா. இவர், ஆவடி ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார். சோனியாவிற்கும்,  27 வயதான முகிலன் என்பவருக்கும் திருமணம் நடந்து, ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக முகிலனும் சோனியாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். சோனியா சென்னையில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், முகிலன் தனது மகளுடன் ஊரிலேயே  வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்ற சோனியா, கணவர் முகிலனுக்கு போன் செய்து, மகளைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். அதன்படி, முகிலன் தனது மகளை அழைத்து வந்து சோனியாவிடம் ஒப்படைத்தார். பின்னர், சோனியா, முகிலன், மற்றும் அவர்களது மகள் ஆகிய மூவரும் ஒன்றாகக் கடற்கரைக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு வந்தனர். அதன் பிறகு, முகிலன் மகளை மீண்டும் அழைத்துச் சென்றார்.

இந்தச் சூழலில், கடந்த 1-ஆம் தேதி, சோனியா தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தான் விஷம் அருந்திவிட்டதாகவும், மகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளுமாறும் கூறி இணைப்பைத் துண்டித்தார். இதனால் பதறிப்போன முகிலன், சோனியாவின் வீட்டிற்கு விரைந்து சென்று, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும், சிகிச்சை பலனளிக்காமல், 2-ஆம் தேதி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, சோனியா விஷம் அருந்துவதற்கு முன்பு தனது கணவருக்கு ஒரு கடிதம் எழுதி, அதன் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியிருந்தார்.

Advertisment

அந்தக் கடிதத்தைப் பார்த்து முகிலனும் அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர். கடிதத்தில், “சென்னை ஆவடியில் பணிபுரிந்த எனக்கு, அங்கு பணிபுரிந்த காவலர் ராஜு(28) என்பவர் அறிமுகமானார். முதலில் ராஜுவுடன் நண்பராக பழகி வந்தேன். பின்பு அவரிடம்  எனது திருமன வாழ்க்கை பற்றியும் கூறினேன். மேலும் விவகாரத்து ஆனவுடன் என்னை திருமணம் செய்து கொளவதாக உறுதியளித்தார். அதனை நம்பி நெருங்கி பழகி அவர் மூலம் கர்ப்பம் ஆனேன். இதனை ராஜுவிடம் கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். ஆனால் அவர் கருவை கலைத்துவிடு என்று மிரட்டினார். அதை நான் கேட்கவில்லை. அவர் என்மீது பொய்யான புகார் அளித்து அந்த புகாரை காவல் துணை கண்காணிப்பாளர் விசாரித்தார். அன்று இரவு ராஜு என்னிடம் பேரினார். நாம் இருவரும் பேசி முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும், நீ குழந்தையை கலைத்து விடு 8 மாதத்திற்கு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம்” என்று கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாகவும், பணிச்சுமை அதிகமாக வழங்கப்பட்டதால் கரு கலைந்துவிட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கூறியிருந்தார். தனது மரணத்திற்கு ராஜு மட்டுமே காரணம் என்றும், தனது கணவர் மற்றும் மகளை விசாரிக்க வேண்டாம் என்றும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், காவல்துறையினர் காவலர் ராஜுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.