Advertisment

ஓடும் ஆட்டோவில் பிரசவம்; பெண் காவலரால் காப்பாற்றப்பட்ட இரு உயிர்கள்!

2

திருப்பூர், வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 12 மணியளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஒரு பெண் அலறித் துடித்ததை உணர்ந்தனர். உடனடியாக ஆட்டோவின் அருகே சென்று பார்த்தபோது, ஒடிசாவைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்வது தெரியவந்தது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் குழந்தை பிறந்துவிடும் சூழல் ஏற்பட்டிருந்தது.

Advertisment

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பெண் காவலர் கோகிலா, உடனடியாக ஆட்டோவில் ஏறி, வலியால் துடித்த பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதனால், அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயையும் சேயையும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, குழந்தையின் தொப்புள்கொடியை அகற்றி, இருவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த வடமாநிலப் பெண்ணுக்கு பெண் காவலர் ஒருவர் பிரசவம் பார்த்து, தாய் மற்றும் சேயை காப்பாற்றிய இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலாவை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோகிலா, “நேற்று சுதந்திர தினம் என்பதால் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். நள்ளிரவில் சோதனை மேற்கொண்டிருந்த பகுதியில் ஆட்டோவில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, வடமாநிலப் பெண் ஒருவர் பிரசவ வலியில் துடிப்பது தெரியவந்தது. உடனடியாக உதவி காவல் ஆய்வாளர், ‘நான் மருத்துவமனைக்குச் சென்று ஏற்பாடுகளைச் செய்கிறேன். நீங்கள் ஆட்டோவில் பெண்ணுடன் வாருங்கள் என்றார். ஆட்டோவில் செல்லும்போது அந்தப் பெண்ணுக்கு பிரசவம் ஆனது. நான் ஏற்கனவே நர்சிங் படித்து, எட்டு மாதங்கள் பயிற்சி பெற்றிருந்ததால், பிரசவம் பார்க்க முடிந்தது. மருத்துவமனைக்கு செல்வதற்குள் அந்தப் பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பின்னர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் தொப்புள்கொடி அகற்றப்பட்டு, இருவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். நர்சிங் படித்திருந்தாலும், எனக்கு காவலராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால், நர்சிங்கை விட்டுவிட்டு காவலராகப் பணியாற்றி வருகிறேன். இருப்பினும், இந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க எனது படிப்பு உதவியாக இருந்தது, இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது,” என்றார்.

மேலும், தனது சொந்த ஊர் சேலம் என்றும், தற்போது திருப்பூர் எம்ஜிஆர் நகரில் தங்கி காவலராகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். தனது தந்தை ராஜா தற்போது உயிருடன் இல்லை என்றும், தாய் ஜெயந்தி மற்றும் அக்கா, தம்பியுடன் வசிப்பதாகவும் தெரிவித்தார். பெண் காவலர் கோகிலாவின் செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Pregnant woman police tirupur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe