female officer outraged on maharashtra Minister omits Ambedkar's name at Republic Day function
நாடு முழுவதும் நேற்று (26-01-26) 77 வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, குடியரசு தின விழா குறித்து உரையாற்றினார். இந்த உரையில் டாக்டர் அம்பேத்காரின் பெயர் குறிப்பிடப்படாததால், ​​பெண் வனத்துறை அதிகாரி மாதவி ஜாதவ் என்பவர் அமைச்சர் உரையாற்றிகொண்டிருக்கும் போது குறுக்கிட்டார். அப்போது அம்பேத்காரின் பெயரை திட்டமிட்டே அமைச்சர் தவிர்த்ததாகாக் கூறி, அமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அந்த நிகழ்ச்சியில் சலசப்பு ஏற்பட்டது. உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டக் கால்துறையினர் மாதவியை சிறுது நேரம் காவலில் வைத்தனர்.
இது குறித்து பேசிய மாதவி, “கிரிஷ் மகாஜன் தனது உரையில் டாக்டர் அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு சம்பந்தம் இல்லாதவர்களின் பெயர்களை அடிக்கடி குறிப்பிடுகிறார். குடியரசு தினம் என்பது அரசியலமைப்பைக் கொண்டாடும் தினமாகும். இந்நாளில் அம்பேத்கரின் பெயர் குறிப்பிடப்படாமல் தவிர்ப்பது என்பது அம்பேத்கரின் அடையாளத்தை அழிக்கும் ஒரு முயற்சியாகும். பாபாசாகேப் அம்பேத்கரால் தான் என்னைப் போன்றவர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்கின்றன. அவர் இயற்றிய சட்டங்கள் அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்கின்றன. எனவே, அவரைப் போற்றாமல், திட்டமிட்டே அவரின் பெயரைத் தவிர்த்ததால் இந்த உரையை கண்டிக்கின்றேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க மாட்டேன், அதற்காக என்னை பணி இடைநீக்கம் செய்தாலும் பரவாயில்லை” என்று கூறினார்.
குடியரசு தின விழா உரையின் போது அம்பேத்கரின் பெயர் தவிர்க்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தன. அந்த வகையில், காங்கிரசின் மும்பை நாடாளுமன்ற உறுப்பினர் கெய்க்வாட் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “குடியரசு தினம் என்பது அரசியலமைப்பைக் கொண்டாடும் நாளாகும். அரசியலமைப்பையும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களையும் மறப்பது பாஜகவின் மக்கள் விரோத மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது வனத்துறை அதிகாரி மாதவி ஜாதவ் எழுப்பிய எதிர்ப்புக் குரல் என்பது, ஒவ்வொரு சுயமரியாதை கொண்ட மராத்தி குடிமகனின் குரலைப் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார். இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது
இதனையடுத்து அம்பேத்கர் பெயர் பயன்படுத்தாதற்கு அமைச்சர் கிரிஷ் மகாஜன் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அமைச்சர் கிரிஷ் மகாஜன், “அம்பேத்கரின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து தற்செயலானது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. நான் எப்பொழுதும் எனது உரைகளில் அம்பேத்கரை போற்றுவேன். தற்போது அவரது பெயரை குறிப்பிடாமல் தவிர்தற்காக, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
Follow Us