திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் லீனா . இவர் தனியார் பல்நோக்கு மருத்துவமனையில், தலைமைச் செவிலியராகப் பணியாற்றி வந்துள்ளார். மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான மதனகோபால் செவிலியர் லீனாவிற்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த லீனா வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.
இருப்பினும் விடாத அந்த மருத்துவர் மதனகோபால் லீனாவை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகப் பேசுவதும், ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்புவதுமாக இருந்துள்ளார். இது குறித்து லீனாவின் உறவினர்கள் மருத்துவரை எச்சரித்த பொழுதும் தொடர்ந்து ஆபாசமாகப் பேசியும், லீனாவின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டிற்குச் சென்று லீனாவிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பழனி காவல் நிலையத்தில் 5 மாதங்களுக்கு முன்பே செவிலியர் லீனா தரப்பில் இருந்து இரண்டு முறை புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில்தான் லீனாவையும் அவரது உறவினர்களையும் மருத்துவர் மதனகோபால் மற்றும் அவரது மனைவி அமுதவல்லி இருவரும் சேர்ந்து, புகாரைத் திரும்பப் பெறக்கோரி மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து 23 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த லீனா, தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்தார். அதில், “மருத்துவர் மதனகோபால் மற்றும் அவரது மனைவி அமுதவல்லியால் பாதிக்கப்பட்டது நான்தான். ஆனால், இரண்டு முறை புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து மருத்துவர் மதனகோபால் மீது எவ்வித நடவடிக்கையும் காவல் துறையினர் எடுக்கவில்லை. செல்போனில் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்புவது சாதாரண விஷயம் என்றும் கூறுகின்றனர். ஆனால் மருத்துவர் மதனகோபால் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்; அதற்கு நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர். மேலும் தற்பொழுது மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் சிக்கலான விஷயம்; மருத்துவச் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று கூறுகின்றனர்.
ஆனால் ஐ.எம்.ஏ. மருத்துவர்கள் சங்கத்தில் நான் முறையிட்ட பொழுது இது போன்ற விஷயங்களுக்கு நாங்கள் மருத்துவருக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்; நீங்கள் புகார் அளியுங்கள் என்று கூறுகின்றனர். மேலும் தி.மு.க. அமைச்சர் ஒருவர் மருத்துவரின் மைத்துனருக்கு பழக்கமானவர் என்றும் அதனால் மருத்துவரைக் கைது செய்தால் தி.மு.க. அமைச்சரிடத்தில் இருந்து அழுத்தம் ஏற்படும் என்று கூறி வழக்கை வேறு பக்கம் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்று செவிலியர் கூறினார்.
எனவே இரண்டு முறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தும் இதுவரை கைது செய்யாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும், தவறு செய்துவிட்டு வெளியே சுதந்திரமாகச் சுற்றும் குற்றவாளி மருத்துவர் மதனகோபாலைக் கைது செய்ய வேண்டும் என்று கூறி மனு அளிக்க வந்திருப்பதாக செவிலியர் லீனா தெரிவித்தார். மேலும் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் என்னுடைய புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குற்றவாளியைக் கைது செய்யும் வரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறினார்.
புகார் மனு கொடுக்கும் பொழுது லீனா மற்றும் அவரது உறவினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் பாவலன், மாவட்டச் செயலாளர் மைதீன் பாவா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/24/untitled-1-2025-10-24-17-53-57.jpg)