நூலக அலுவலகத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகர் ஒருவரையில் தரையில் அமரவைத்து மனு எழுத வைத்த சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்ட மைய நூலகம், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த நூலகத்தில் நூலக அலுவலராக காசிமும், மாவட்ட கண்காணிப்பாளராக வெங்கடேசனும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த நூலகத்திற்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி வந்த அரசமங்கலம் கிராம கிளை நூலகர் சிவசங்கரி, சென்னாகுனம் நூலகம் வாடகைக் கட்டிடத்தில் செயல்படுவதால், அதற்கான வாடகையை உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர் கடந்த ஆறு மாதங்களாக வழங்கி வந்தார். ஆனால், அவர் இனி வாடகை வழங்க இயலாது தெரிவித்துள்ளார். அதனால், கட்டிட வாடகை தரும்படி மாவட்ட கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனை வெங்கடேசன், மனுவாக எழுதி கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். அப்போது அலுவலகத்தில் அமருவதற்கு இருக்கை இல்லை என்று கூறியதால் சிவசங்கரி தரையில் அமர்ந்து மனுவை எழுதியுள்ளார். சிவசங்கரி பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு இருக்கை அளிக்காமல் தரையில் அமர வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிவசங்கரி தரையில் அமர்ந்து மனு எழுதிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கணவர் விஸ்வநாதன் உள்ளே வந்தார். அப்போது, "ஏன் இருக்கையில் அமர வைத்து மனு எழுதச் சொல்லக்கூடாது? அரசு அலுவலகத்தில் சமூக நீதியை நல்ல பாதுகாக்குறீங்க.... என்று கேள்வி எழுப்பி, இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் வெங்கடேசனிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, "நூலகத்திற்கு வருபவர்களை தரையில் அமர்ந்து மனு எழுதுமாறு நாங்கள் வற்புறுத்துவதில்லை. சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. மனு எழுதுவதற்கு பணியாளர்களுக்கு மேசைகளும் இருக்கைகளும் நூலகத்தில் உள்ளன. சிவசங்கரி தனது விருப்பத்தின் பேரிலேயே தரையில் அமர்ந்து மனு எழுதினார்," என்று தெரிவித்தார்.
அரசு பணியிடங்களில் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடு இன்னும் நீடிப்பதையே இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர்கள், பட்டியல் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பாகுபாடுகளைத் தடுக்க அரசு விழிப்புணர்வு மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.