நீதிமன்ற வளாகத்திலேயே இரண்டு பெண் வழக்கறிஞர்கள் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டு பெண் வழக்கறிஞர்கள் கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டு கொண்டனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், இரண்டு வழக்கறிஞர்கள் மாறி மாறி குத்து விட்டு சண்டையிட்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பெண் வழக்கறிஞர், ஒரு வழக்கறிஞருடன் சேர்ந்து மற்றொருவரின் கையைப் பிடித்து தலைமுடியை இழுத்து அடிக்கத் தொடங்கினார். இந்த சண்டையை, அங்கு வேடிக்கைப் பார்த்த பொதுமக்கள் யாரும் தடுக்கவில்லை என்பதை வீடியோவில் காண முடிகிறது. ஒரு அறை தொடர்பான தகராறில் இரண்டு வழக்கறிஞர்களும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர் என்று முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரான சினே லதாவும், அவரது நண்பரும் சக ஊழியருமான மற்றொரு வழக்கறிஞரும் ஒரு அறையை கூட்டாகத் திறக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், அந்த பெண் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனையால் இரண்டு வழக்கறிஞர்களும் சண்டையிட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த சினே லதா, ‘ நானும் எனது சக ஊழியரும் ஒரு அறையை கூட்டாகத் திறக்கத் முடிவு செய்தோம். நாம் சகோதரிகள், நான் உன்னை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன், என்று அவள் ஆரம்பத்தில் என்னிடம் கூறினாள். நான் அறையை அமைப்பதற்காக என் பணத்தை முதலீடு செய்தேன்.
அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் தீர்த்து வைக்க கடுமையாக உழைத்தேன். ஆனால், இன்று காலை நான் இன்று காலை நாற்காலியை எடுத்து எங்கள் அறையில் உட்கார வந்தேன். அப்போது, அவள் நாற்காலியை உதைத்து நாற்காலியை உடைக்க ஆரம்பித்தாள். அவள் என் ஸ்கூட்டரை உதைத்தாள். இது என் அறை, உன் அறை அல்ல, நான் இந்த அறையின் உரிமையாளர், நீ உட்காரக் கூடாது, இங்கிருந்து வெளியேறு என்று கூறினாள். இதனால் சண்டை வந்துவிட்டது’ என்று கூறினார்.