தன்னை துன்புறுத்திய மாவட்ட நீதிபதிக்கு உயர் நீதிமன்றத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேதனையுடன் ஒரு பெண் சிவில் நீதிபதி ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த, கர்ப்பிணியான அதிதி குமார் சர்மா உள்பட 6 பெண் நீதிபதிகள் பணி நீக்கம் செய்து கடந்த 2023ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தகுதிகாண் காலத்தின் போது நீதிபதிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனக் கூறி மாநில சட்டத் துறை அவர்களின் சேவைகளை நிறுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குப் பிறகு அதிதி குமார் சர்மாவுக்கு கரு கலைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துகொண்டது.

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 6 பெண் நீதிபதிகளின் வழக்கு தொடர்பான விசாரித்த உச்சநீதிமன்றம், நான்கு பேரை மட்டும் மீண்டும் பணியில் அமர வைக்கப்பட்டனர். ஆனால், அதிதி குமார் சர்மா மற்றும் சரிதா செளத்ரி ஆகியோ விலக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் பணிநீக்க முடிவு சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று கூறி அதிதி குமார் சர்மா மற்றும் சரிதா செளத்ரியை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டது. அதன்படி, ஷாதோல் மாவட்ட ஜூனியர் பிரிவு சிவில் நீதிபதியாக அதிதி குமார் சர்மா பணியாற்றி வந்தார். இதனிடையே, மாவட்ட நீதிபதி ராஜேஷ் குமார் குப்தா தன்னை துன்புறுத்தியதாக அதிதி குமார் சர்மா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இதனிடையே, ராஜேஷ் குமார் குப்தாவுக்கு, மத்திய உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு கிடைத்தது.

இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி நீதிபதி அதிதி குமார் சர்மா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், ‘நான் நீதித்துறைப் பணியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். நீதித்துறை தோல்வியடைந்ததால் ராஜினாமா செய்யவில்லை, நீதித்துறை என்னை தோல்வியடைய செய்துவிட்டது என்பதால் ராஜினாமா செய்கிறேன். அளவு கடந்த அதிகாரம் கொண்ட மூத்த நீதிபதிக்கு எதிராக நான் பேசியதால் பல ஆண்டுகளாக தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன். நீதி கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு விசாரணையாவது நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் அனைத்து நியாயமான வழிகளையும் பின்பற்றினேன். ஆனால், எனது துன்பத்திற்கு காரணமானவர் விசாரிக்கப்படவில்லை. மாறாக அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு பதிலாக கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. 

Advertisment

நீதிபதி மீது ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளை வைத்து குற்றம் சாட்டினேன். ஆனால், எந்த விசாரணையும் இல்லை எந்த நோட்டீஸும் வழங்கப்படவில்லை, அவரிடம் எந்த விளக்கமும் கூட கேட்கப்படவில்லை, எந்த பொறுப்புடைமையும் இல்லை. இப்போது நீதி என்று அழைக்கப்படுவது ஒரு கொடூரமான நகைச்சுவையாகிவிட்டது. நான் பழிவாங்க முயற்சிக்கவில்லை. நான் நீதிக்காக அழுதேன், எனக்காக மட்டுமல்ல நான் நேசித்த நம்பிய நீதித்துறைக்காகவும் தான். அது என்னை நம்பாதபோதும் அழுதேன். என்னை மீண்டும் பணியில் அமர்த்தினாலும், இழப்பீடு பெற்றாலும், மன்னிப்பு கேட்டாலும் குணமடையாத காயங்களுடன் நான் இப்போது வெளியேறுகிறேன். இந்தக் கடிதம் அது உள்ளிடும் கோப்புகளை வேட்டையாடட்டும்.

நான் இப்போது வெளியேறுகிறேன். நீதிமன்றத்தின் அதிகாரியாக இல்லாமல் மெளனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவராக வெளியேறுகிறேன். இந்த நீதித்துறையில் இருந்து, பதக்கங்கள் இல்லாமல், கொண்டாட்டம் இல்லாமல், கசப்பு இல்லாமல் நான் வெளியேறுகிறேன். கசப்பான உண்மை என்னவென்றால் நீதித்துறை என்னை தோற்கடித்துவிட்டது. ஆனால், அதைவிட மோசமானது நீதித்துறை தானே தோல்வியடைந்துவிட்டது’ என்று உருக்கமாகவும் வேதனையுடனும் எழுதியுள்ளார். பெண் சிவில் நீதிபதியின் இந்த திடீர் ராஜினாமா, நீதித்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.