கேரளா பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் ஒன்று அளித்திருப்பது கேரள அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கேரளா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னதாக வார்டு கவுன்சில் அலுவலகத்தில் தூக்கிய தொங்கியபடி பா.ஜ.க கவுன்சிலர் கே.அனில் குமார் என்பவர் இறந்து கிடந்துள்ளார். கவுன்சிலரின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கேரள ஆளுங்கட்சியான சிபிஐ(எம்) மற்றும் காவல்துறையினர் இச்சம்பவத்தில் சதித்திட்டம் தீட்டியதாக பா.ஜ.க தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அனில் குமாரின் தற்கொலைக் குறிப்பில், தனது சொந்த கட்சியினரின் ஆதரவு இல்லாததை மட்டும் குறிப்பிட்டுள்ளதாகவும், கட்சி அல்லது காவல்துறையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும் சிபிஐ(எம்) தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது.
இந்த நிலையில், கேரளா பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீன் சந்திரசேகர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஆளுங்கட்சியான சிபிஐ(எம்) கட்சியின் அதிகாரப்பூர்வ சேனலான கைரளி டிவியில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், அனில் குமாரின் மரணம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சந்திரசேகர் கோபமாக, ‘நீங்கள் எந்த சேனலில் வேலை பார்க்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். அந்த பத்திரிகையாளர் கைரளி டிவியில் பணிபுரிந்ததை அறிந்த சந்திரசேகர், ‘நீ கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்று கூறினார்.
பெண் பத்திரிகையாளரை ‘நீ’ என்று அழைத்து அவமரியாதை செய்ததாகக் பலரும் ராஜீன் சந்திரசேகருக்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் ராஜீவ் சந்திரசேகருக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், கைரளி டிவியின் பத்திரிகையாளர் கேரள காவல்துறை தலைமை இயக்குநரிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் மீது புகார் அளித்தார். அதில், தான் பணியில் இருந்த போது ராஜீவ் சந்திரசேகர் தன்னை மிரட்டினார், அவமானப்படுத்தினார், கத்தினார். எனவே, அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.